இப்போ கால் பண்றாங்களே, என்ன சொல்லி சமாளிக்க?
"ஹலோ"
"எங்க இருக்க? மாலதிய போய் பாத்துட்டு வந்துட்டியா ?"
"ம் பாத்தேன்மா"
"என்னடா ஒத்த வார்த்தைல பதில் சொல்ற?"
"நான் வண்டி ஒட்டிட்டு இருக்கேன்மா ஒரு 2 மணி நேரத்ல கூப்டறேன்"
"சரி"
சுனில் ஒரு மாறி பாத்தான்.
"என்னாது 2 மணி நேரத்துல கால் பண்றியா? தம்பி இப்போ தான் ஆம்பூர், ரெண்டு மணி நேரத்துல மிஞ்சி போனா தொப்பூர் போலாம். கொஞ்சம் கூடுதலா மிதிச்சா ஓமலூர். அதுக்கப்றம் 200 கிலோ மீட்டர் போனும் தெரியும்ல"
"அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். நீ வண்டி ஓட்டு பாத்துக்கலாம்"
வீணா கேட்டா,"என்ன ராகுல் கேட்டாங்க அம்மா?"
"ஒன்னும் பெருசா இல்ல வீணா சமாளிச்சுட்டேன். உங்க வீட்ல என்னன்னு சொல்லி நம்ம விசயத்த சொல்ல போற?"
"தெரில ராகுல், அதான் யோசிச்சிட்டு இருக்கேன். உங்க வீட்ல ஒத்துபாங்கல்ல?"
இத கேக்கும் பொது அவ கண்ல ஒரு ஏக்கம் தெரிஞ்சது. பாவம் ரொம்ப பயந்து போய்டா போல.
"அதெல்லாம் பேசற மாறி பேசிக்கலாம் வீணா, கவலை படாத"
அவள சமாதானம் பண்ண சொன்னேனே தவிர, என்ன பண்ண போறேன்னு சத்தியமா தெரில.
பாப்போம்.
கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம். அப்பறம் தூங்கிட்டா. வண்டி பர்கூர் கிட்ட போய்ட்டு இருந்தது.
"சுனில், கிருஷ்ணகிரில நிறுத்து. டீ சாப்டலாம். நான் ஓட்டறேன்"
"பரவால்லடா நீ பின்னாடியே இரு.ஒரு லவ் ஜோடிய பிரிச்ச பாவம் எனக்கு எதுக்கு"
"ரொம்ப டயலாக் பேசாத. அவ தூங்கிட்டா"
டீ சாப்டும் போது கேட்டான்.
"என்னடா சொல்ல போற வீட்ல? எதாச்சும் பிளான் வெச்சு இருக்கியா? செம கத்து கத்த போறாங்கடா"
"அதுக்கு தான உன்ன கூட கூட்டிட்டு போறேன். நீ இருக்கும் போது அவ்ளோ திட்டு விழுகாது மாப்ள"
"உங்க லவ்க்கு நீங்க அடி வாங்கறீங்களோ இல்லையோ, எங்கள கோத்து விட்டு வேடிக்க பாருங்கடா"
"அந்த அளவு விட்டுடுவோமா பாத்துக்கலாம் மாப்ள"
சாயங்காலம் கோவை ரீச் ஆனோம். வீணாவ கொண்டு போய் அவ வீட்ல விட்டுட்டு ஆல் தி பெஸ்ட் சொல்லிட்டு எங்க வீட்டுக்கு போனோம்.
முதல் முறையா எங்க வீடுக்குள்ள போக எனக்கு பயமா இருந்துச்சு. இவன் வேற உள்ளயே வர மாட்டேங்கறான். இவன வெச்சு கொஞ்ச திட்டுல இருந்து தப்பிச்சுக்கலாம்ன்னு பாத்தா நடக்காது போலயே.
அப்பா அம்மா ரெண்டு பேரும் டிவி பாத்துட்டு இருந்தாங்க.
"அம்மா"
"டேய் என்னடா மத்தியானம் தான் பேசின, அதுக்குள்ள வந்து நிக்கற"
"இல்லம்மா அது வந்து"
"எப்படி வந்தீங்க?"
"கார்ல. சுனில்க்கு தெரிஞ்சவங்க கார்"
"கார் ல இவ்ளோ தூரம். என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க. போய் முகம் கழுவீட்டு வா.. காபி போடறேன்"
"ஹ்ம்ம்"
சுனில் பயத்துல நடுங்கீட்டு இருந்தான்.
காபி வந்தது. நான் பேச்ச ஆரம்பிக்கறது தான் நல்லதுன்னு தோணுச்சு.
"அம்மா, இவ்ளோ சீக்கிரம் எனக்கு பொண்ணு பாக்க ஆரம்பிப்பீங்கன்னு தோனல.."
"அட வயசு..."
"இரு இரு, நான் பேசி முடிச்சிடறேன். இத நேர்ல பேசினா தான் நல்லா இருக்கும்ன்னு தான் கிளம்பி வந்தோம். மாலதிய பாத்தேன். நல்ல பொண்ணு தான். உன் செலக்சன் என்னைக்குமே நல்லா தான் இருக்கும்........ ஆனா எனக்கு வேற ஒரு பொண்ண பிடிச்சிருக்கு"
வேகமா சொல்லி முடிச்சிட்டு, என்ன சொல்ல போறாங்களோன்னு பதட்டமா பாத்தேன்.
வாழ்க்கைல எதிர் பாக்கறது நடக்கவே நடக்காதோ?